கரூரில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு கூட்டம்

கரூரில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் அந்தக்குழுவினர் சமணர் படுகை, கதவணை கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.

Update: 2023-03-09 18:54 GMT

ஆய்வு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு உறுதிமொழி குழுத்தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் அர்ஜூனன், சின்னப்பா, அம்பேத்குமார், தேவராஜி, மகாராஜன், ராமச்சந்திரன், மாணிக்கம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள் துறை, கூட்டுறவுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தி துறை, குறு சிறு நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை (நீர் வளம்) உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சட்டமன்ற பேரவை உறுதிமொழி பதில்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ெநாய்யல்

முன்னதாக இக்குழுவினர் புகழூர் வட்டம், புகழிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.62 லட்சத்து 62 ஆயிரத்தில் 15 பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் மலைப்பகுதியில் தொல்லியல் துறை சார்பில் பண்டைய காலத்து சமணர் படுகை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நஞ்சை புகழூர் பகுதியில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் ரூ.406 கோடியே 50 லட்சத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கதவணையின் திட்டப்பணிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி மூலம் பணிகள் நடைபெற்று வரும் விரிவாக்கத்தினை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.70 லட்சத்தில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வணிக வளாகம் கட்டிடம், நியாய விலைக்கடை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு மேற்கொண்டனர்.

கட்டுமான பணிகள்

பின்னர் தோரணக்கல்பட்டியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ரூ.2 கோடியில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அரவக்குறிச்சி ரூ.1 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரத்தில் கட்டப்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிடம், அலுவலக வளாகம் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தும் கட்டிட பணிகள் ஆகியவற்றையும் அரசு உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை இணைச்செயலாளர் கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் ரவி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்