அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு
சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
உறுதி மொழிக்குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2023-ம் ஆண்டுகளுக்கான அரசு உறுதிமொழிக்குழு சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் மீது சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தது.
அந்த வகையில், சட்டசபை அரசு உறுதி மொழிக்குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அர்ஜூணன், சின்னப்பா, செல்வராஜ், தங்கப்பாண்டியன், மகாராஜன் ஆகியோர் நேற்று சேலம் மாவட்டத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியார் பல்கலைக்கழகம்
அதன்படி, முதலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கு புதிதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சட்டசபை உறுதிமொழிக்குழுவின் தலைவர் உதயசூரியன் தலைமையில் குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு மேட்டூர் அருகே கோனூர் சென்றாய பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணையில்...
இதையடுத்து மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் இருந்து நீர் வழங்கும் திட்டம் ரூ.565 கோடியில் நடைபெற்று வருவதை உறுதிமொழிக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் ரூ.97.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கீழ்மட்ட மதகு கதவு எண்-5 ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து எரிசக்தித்துறையின் சார்பில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர்ந்த சாம்பல் வெளியேற்றும் அமைப்பு அமைக்கப்பட உள்ளதை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக சட்டசபை அரசு உறுதிமொழிக்குழுவினர் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.