10.50% வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் அடுத்த மாதத்திற்குள் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
10.50% வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் அடுத்த மாதத்திற்குள் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டிற்காக எனது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 ஈகியர்களின் 36-ஆம் நினைவுநாளும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சமூகநீதி நாளும் இன்று கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான வாய்ப்புகள் மின்மினிப்பூச்சியின் வெளிச்சத்திற்கு இணையாகக் கூட தெரியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது; இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது.
வன்னியர்களின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றில் இன்றைய நாள் முதன்மைத்துவம் வாய்ந்த நாள். பல நூற்றாண்டுகளாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வன்னியர்களுக்கு சமூக நீதி கோரி 1980ஆம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லாமல் போன நிலையில், அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 36 ஆண்டுகளுக்கு முன் 1987-ஆம் ஆண்டில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று தான் ஒரு வார சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினோம்.
போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத காவல்துறையினர் கட்டவிழ்த்து விட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு 21 சொந்தங்களை பலி கொடுத்தோம். அதைத் தொடர்ந்து தான் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை 1989-ஆம் ஆண்டு ஏற்படுத்திய அப்போதைய முதல்வர் கருணாநிதி, அந்தப் பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதால் தான் மீண்டுமொரு சமூகநீதி போராட்டம் நடத்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம்.
அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கூட, உரிய தரவுகளை திரட்டி இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் கிடையாது என்று கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் கூட, அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 3 மாதங்களில் உரிய தரவுகளைத் திரட்டி, சட்டம் இயற்றி கடந்த கல்வி ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், 9 மாதங்கள் தாமதமாக கடந்த நவம்பர் 17-ஆம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாளில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
அதன்படி, ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கான எந்தப் பணியையும் ஆணையம் மேற்கொள்ளாத நிலையில், அதன்பின் மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டது. அதுவே பெரும் சமூக அநீதி தான். வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட காலக்கெடுவும் நிறைவடைவதற்கு இன்னும் 24 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த முன்னெடுப்புகளும் செய்யப் பட்டதாக தெரியவில்லை.
தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் அனைத்துத் தரவுகளையும் திரட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தையே நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிக்க ஆணையிட்டு 9 மாதங்கள் ஆகவிருக்கும் நிலையிலும் இதுவரை எதுவுமே நடக்கவில்லை எனும் போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு விருப்பம் இல்லையோ? இட ஒதுக்கீடு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறியே காலத்தை கடத்தி விட அரசு நினைகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இது நியாயமானது தான்.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடந்த இரு ஆண்டுகளில் 03.11.2021, 08.04.2022, 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 03.04.2023, 10.05.2023 ஆகிய நாள்களில் மொத்தம் 7 முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலமுறை தொலைபேசி வழியாக உரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் எனக்கு அளித்த வாக்குறுதி, ''வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்'' என்பது தான். ஆனால், அதற்கான அறிகுறிகள் மின்மினிப் பூச்சியின் ஒளி அளவுக்குக் கூட தென்படவில்லை என்பது தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை அளிப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதே, அதற்கு பா.ம.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பா.ம.க. குழுவை அழைத்துப் பேசிய அரசுத் தரப்பு, ''6 மாதங்கள் என்பது அதிகபட்ச கால அவகாசம் தான். ஒரு மாதத்திற்குள்ளாகவே பணிகள் முடிந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தனர். அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை தெரிவித்தனர். ஆனால், 6 மாத கெடுவே முடிவடையவுள்ள நிலையில் இன்னும் ஆக்கப்பூர்வமாக எதுவும் நடைபெற வில்லை எனும் போது, இந்த விவகாரத்தில் அரசை இன்னும் எப்படி நம்பிக் கொண்டிருக்க முடியும்?
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இருமுறை முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளார். பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்துத்து பேசினார்கள். அவர்களிடமும் இதே கருத்தைத் தான் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளாகவே உள்ளனவே தவிர, அவற்றுக்கு செயல்வடிவம் தரப்படவில்லை. வாக்குறுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. இதை அரசு உணர வேண்டும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதன்பின் இரு நாள்கள் கழித்து ஏப்ரல் 2-ஆம் நாள் சென்னையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதை நினைவு கூற விரும்புகிறேன். ''சமூகநீதியை எப்போதும் நாம் போராடித் தான் வென்றெடுத்து வந்துள்ளோம், ஆனால், இந்த முறை முதல்வர் போராடாமலேயே இட ஒதுக்கீட்டை வழங்குவார்'' என்று நான் கூறினேன். அதற்காகவே இதுவரை எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. தேவைப்பட்டால் தீவிர போராட்டங்களை நடத்தி சமூகநீதியை வென்றெடுக்க பாமக தயாராக உள்ளது.
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்க அவர்கள் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சமூகநீதியைப் பெறுவதில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள், சமூகநீதியை வென்றெடுப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராகவே உள்ளனர். அத்தகைய மாபெரும் போராட்டத்தை தலைமையேற்று நடத்த நானும் தயாராகவே உள்ளேன்.
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பா.ம.க. இனியும் இலவுகாத்த கிளியாக இருக்க முடியாது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் வன்னிய இளைஞர்கள் என்னைப் பார்த்து, 10.50% இட ஒதுக்கீடு என்ன ஆனது? என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் என்னிடம் இல்லை. வன்னிய இளைஞர்களை நீண்ட காலம் கட்டுப்படுத்தியும் வைக்க முடியாது. இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும். சமூகநீதி நாளான இன்று இதுகுறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று, அதனடிப்படையில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் செயல்படுத்தபட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு பிரிவிலும், அதில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது? அதை தவிர்த்து பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 விழுக்காட்டில் எந்தெந்த சமுதாயங்களுக்கு எத்தனை விழுக்காடு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது? என்பது குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.