சிலை அமைக்கவும், கட்டிடம் கட்டவும் அனுமதி பெறவில்லை என்றால் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சிலை அமைக்கவும், கட்டிடம் கட்டுவதற்கும் முறையான அனுமதியை பெறவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-24 20:39 GMT

சென்னை,

வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியின பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்தம்மாள். இவர், சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் இயற்கையான வாழ்வியல் முறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிக ரீதியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது வனப்பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் சில குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை வகைப்பாடு செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் வேறு எந்தவொரு அனுமதியும் பெறாமல் ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டுமானங்களை சட்டவிரோதமாக எழுப்பியுள்ளனர்.

தடை வேண்டும்

எனவே, இப்பகுதியில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டக்கூடாது. வனப்பகுதிகளில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும். ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை துணை இயக்குனர் ஆர்.ராஜகுரு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஆவணங்கள் இல்லை

அதில், ''ஈஷா யோகா மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20.805 ஹெக்டேர் நிலப்பரப்பில், 15.53 ஹெக்டேர் நஞ்சை நிலமாகவும், மீதமுள்ளவை புஞ்சை நிலமாகவும் உள்ளது. அதில் அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளது. இந்த நிலங்களில் கட்டப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றும் கட்டுமானப்பணிகளுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்களது அலுவலகத்தில் இல்லை. அதேபோல இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும் இதற்கான அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்கள் இல்லை. மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மலைப்பகுதி இடர் பாதுகாப்பு அமைப்பு, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்று பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை'' என்று கூறியிருந்தார்.

சட்டப்படி நடவடிக்கை

மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ''இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் ஈஷா யோகா மையம் தாக்கல் செய்யும் ஆவணங்களை கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துணை இயக்குனர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதில் உரிய அனுமதி பெறப்படவில்லை என தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும். இதற்காக ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை எல்லாம் 2 வாரத்துக்குள் அதிகாரி முன்பு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்