பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மீது சட்டரீதியான
திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிவு செய்ய வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், 18-வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கான விடுதிகள், தனியார் பணி புரியும் மகளிர் விடுதிகள் ஆகியவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) விதி 2014-ன் கீழ் விடுதியின் உள்ளுரைவோர் எண்ணிக்கை, கட்டிட பரப்பளவு விபரம், விடுதிகாப்பாளர் மற்றும் பாதுகாப்பாளர் விபரம், வருகை பதிவேடு நகல், கண்காணிப்பு கேமரா பொருத்தியிருப்பின் அதன் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
மேலும் சேர்க்கை பதிவேடு விபரம், முதலுதவிப்பெட்டி பொருத்திய விபரம், உடல்நிலை சரியில்லாத பெண்கள் ஓய்வெடுக்க தனியறை விபரம், மேலாண்மை குழு அமைக்கப்பட்ட விபரம், விடுதி கட்டிடம் சான்று டி-லைசென்ஸ் நகல், பொதுப்பணித்துறையின் மூலம் பெற்ற கட்டிட உறுதிசான்று நகல், சுகாதாரத்துறையிடமிருந்து பெற்ற சுகாதார சான்றுநகல், உணவு பாதுகாத்தல் மற்றும் தரப்படுத்துதல் துறையினரிடமிருந்து பெற்ற தரச்சான்றிதழ் நகல் மற்றும் தீயணைப்புத்துறையினரிடமிருந்து பெற்ற தடையில்லா சான்று நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
சட்டரீதியான நடவடிக்கை
திருவாரூர் மாவட்ட கலெக்டர் என்ற பெயரில் ரூ.3,ஆயிரத்துக்கான வங்கி வரையோலையுடன் இணையதள முகவரி https://tnswp.com வாயிலாக வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் நகல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கான விடுதி தொடர்பான பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தினை அனுகலாம். 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கான விடுதிகள் மற்றும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி தொடர்பான பதிவிற்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ளலாம். ஆய்வின் போது பதிவு செய்யாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.