தண்ணீர் திருடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை

பி.ஏ.பி. கால்வாய்களில் தண்ணீர் திருடினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-10-12 18:45 GMT


பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 44,380 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு 2 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் 22,232 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வறட்சியான சூழ்நிலையில் கால்வாயில் குழாய் அமைத்து தண்ணீர் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் கால்வாயின் பக்கதுளை தோண்டுதல் மூலமாக முறைகேடாக பி.ஏ.பி. நீரை உறிஞ்சி கிணற்றுக்குள் செலுத்தி பின் பாசனத்திற்கு பயன்படுத்தி வருவதாக புகார்கள் பெறப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து நீர்வளத்துறை அதிகாரிகள் பிரதான கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களின் அருகில் உள்ள திறந்த வெளி கிணறுகளை ஆய்வு செய்து வருகின்றனர். முறைகேடு கண்டறியப்பட்டால் தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்யப்படும். இந்த பட்டியலில் சேர்க்கப்படுப வர்களுக்கு அரசின் எவ்வித மானியமும், நலத்திட்ட உதவிகளும் கிடைக்காது.

மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்