கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பல்லடம்
பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவிக்கு பாலியல் தொல்லை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி ஆன்லைன் மூலமாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவானார்.
பேராசிரியர் கைது
இதையடுத்து தலைமறைவாக உள்ள பேராசிரியரை பிடிக்க பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பேராசிரியர் பாலமுருகன் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பாலமுருகனை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முன்னதாக நேற்று காலை இந்திய மாணவர் சங்க அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் நுழைவுவாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.