''பள்ளிக்கு லீவு விடுங்க... உங்களுக்கு கோவில் கட்டுகிறேன்''

‘‘பள்ளிக்கு லீவு விடுங்க... உங்களுக்கு கோவில் கட்டுகிறேன்’’ என்று சமூக வலைத்தளத்தில் கலெக்டருக்கு குறுந்தகவல் மாணவர் அனுப்பினார்.

Update: 2022-10-12 18:32 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் கடந்த 9-ந் தேதி பலத்த மழை பெய்தது. அன்றைய தினம் இரவிலும் மழை நீடித்தது. இந்த நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்த பின் கடந்த 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளில் இரவிலும் மழை நீடித்ததால், மறுநாள் மழை பெய்யலாம் என சூழ்நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் மழையின் காரணமாக கடந்த 10-ந் தேதி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் கவிதாராமு கடந்த 9-ந் தேதி இரவு அறிவித்தார். அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடக்கோரி மாணவர்கள் தரப்பில் இருந்து தனக்கு இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் (மெசேஜ்) வந்ததாக கலெக்டர் கவிதாராமு நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் அனுப்பிய குறுந்தகவல்களையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஒரு மாணவர், மேம் பிளீஸ்.... நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க... லீவு இல்லன்னா பைத்தியம் ஆயிருவேன் போல... பிளீஸ்... பலத்த மழை பெய்யுது... லீவ் மட்டும் விடுங்க... உங்களுக்கு கோவில் கட்டுகிறேன் என் மனசுலே... படிச்சு... படிச்சு... பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு'' என அனுப்பியுள்ளார்.

இதேபோல மற்றொரு மாணவர், ''மார்க் வாங்கல மேம்... நாளை எல்லாரும் கேட்பாங்க... உங்களையே நம்பியிருக்கேன். எனக்காக மட்டுமில்லை. அனைவருக்கும் சேர்த்து தான்'' என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல சில மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கோரி குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஒருவர் செல்லமே...லீவு விடுங்க செல்லமே... என அன்பாகவும் கேட்டிருக்கிறார். மாணவர்களின் கோரிக்கைகளை பார்த்த கலெக்டர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வந்த பின் அதில் ஒரு மாணவன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து... உங்களை மறக்கமாட்டேன்... நீங்கள் ஒரு தேவதை என குறுந்தகவல் அனுப்பி தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த குறுந்தகவல்களை கலெக்டர் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பலரும் லைக் செய்து தங்களது கருத்துகளை முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட கடந்த 10-ந் தேதி பகலில் ஒரு துளிகூட மழை இல்லை. கடும் வெயில் அடித்தது என்பது வேறுகதை.

Tags:    

மேலும் செய்திகள்