பாலாற்றில் நள்ளிரவில் திறந்துவிடப்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுநீர்

ஆம்பூர் பகுதியில் உள்ள பாலாற்றில் தோல்தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் நுரை பொங்கியபடி சென்றது. இதை பார்த்த பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2022-06-15 13:04 GMT

ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் உள்ள பாலாற்றில் தோல்தொழிற்சாலை கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் நுரை பொங்கியபடி சென்றது. இதை பார்த்த பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தோல் தொழிற்சாலைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஷூ கம்பெனிகள் உள்ளன. இந்த தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பெரிய தொட்டிகளில் நிரப்பி சுத்தப் படுத்துவதற்காக ஆம்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் மழைக்காலங்களில் பாலாற்றில் திறந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் கண்மாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்பூரில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நள்ளிரவு நேரத்தில் அப்படியே பாலாற்றில் திறந்து விட்டனர்.

நிரை பொங்கியபடி...

எப்போதெல்லாம் மழை பெய்து பாலாற்றில் தண்ணீர் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த செயலில் சில தோல் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றனர். மாராபட்டு, சோமலாபுரம் பாலாற்றில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை பாலாற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதுடன், பாலாற்றில் செல்லும் தண்ணீரை குடித்து கால்நடைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர். எனவே பாலாறு மாசு ஏற்படுவதை தடுக்க, பாலாற்றில் தோல் கழிவு நீரை திறந்துவிட்ட நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்