வக்கீல்கள் இன்று நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு
பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
பெரம்பலூரில், அட்வகேட்ஸ் அசோசியேசனின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி போலீசாரை கண்டித்தும், தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீரமானத்தின் படியும், கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகியிருப்பது என்று ஏகமனதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.