ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்
ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழனி வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பால்சாமி, பொருளாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது, வக்கீல் சுரேந்தர் மீது பொய் வழக்கு போட்டதாக ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும், வழக்கை திரும்பப்பெற கோரியும் வக்கீல்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் பழனி, திண்டுக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.