திருச்சி மாவட்டத்தில் வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம்
திருச்சி மாவட்டத்தில் வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ஜமீலாபான் (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் நிஷா (21). சேலம் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ந்தேதி ஜமீலாபானு தனது அலுவலகத்தில் மகளுடன் இருந்த போது, ஒரு வாலிபர் அரிவாளுடன் புகுந்து தாய், மகள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் வக்கீல்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளியை விரைந்து கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று திருச்சி மாவட்ட கோர்ட்டு, துறையூர், மணப்பாறை, முசிறி, லால்குடியில் உள்ள கோர்ட்டுகளில் சுமார் 3 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.