போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்

கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-12 18:31 GMT

திண்டிவனம், 

 திண்டிவனம் அருகே உள்ள முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகணபதி (வயது 32). இவர் திண்டிவனம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தனது சகோதரரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மதுராந்தகம் போலீசார் அழைத்துச்சென்றதாகவும், நீங்கள் எங்களுடன் வந்து சகோதரரை மீட்க உதவும்படி கேட்டதோடு, தாங்கள் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் காரில் காத்திருப்பதாகவும் கூறினார். இதை நம்பிய ராஜகணபதி அங்கு சென்று காரில் ஏறி அவர்களுடன் மதுராந்தகம் நோக்கி புறப்பட்டார்.

 ஓங்கூர் சுங்கச்சாவடியை கார் கடந்து சென்றபோது, காரில் மேலும் ஒருவர் ஏறினார். அந்த சமயத்தில் காரில் இருந்தவர்கள் மீது ராஜகணபதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் காரில் இருந்து கீழே குதித்து சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட காரில் இருந்த கும்பல் செல்போன் மூலம் ராஜகணபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தன்னை காரில் ஏற்றி கடத்திச் சென்ற மர்மநபர்களை கைது செய்யக்கோரி உரிய ஆவணங்களுடன் திண்டிவனம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 இதனால் ஆத்திரமடைந்த ராஜகணபதி தன்னுடன் நீதிமன்றத்தில் பணிபுரியும் சக வக்கீல்களுடன் நேற்று திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ம் எதிரே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் வக்கீல் ராஜகணபதியை காரில் கடத்திய கும்பலை கைது செய்யாத போலீசாரை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜகணபதி கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற வக்கீல்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்