திசையன்விளையில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவர் கைது

திசையன்விளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-24 10:59 GMT

திசையன்விளை,

மதுரையை சேர்ந்த சேது என்பவரின் மகன் அன்பழகன்(வயது 40). இவர் திசையன்விளை பிர்க்கா நில அளவையாளராக பணியாற்றி வந்தார்.

திசையன்விளை மணலி விளை அரிகிருஷ்ண நாடார் தெருவை சேர்ந்தவர் வேல் முருகன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவருடைய மனைவி மகாலெட்சுமி(32) பட்டதாரி இவர்களுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்து தரும்படி பிர்க்கா நிலஅளவர் அன்பழகனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மகாலெட்சுமி இதுகுறித்து நெல்லையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகநயினார், சீதாராமன், இசக்கி பாண்டி தலைமையிலான போலீசார், ரசாயாண பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நில அளவர் அன்பழகனிடம் கொடுக்கும்படி மகாலெட்சுமியிடம் கூறிகொடுத்தனர்.

திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து அன்பழகனிடம் மகாலெட்சுமி ரசாயண பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்னர், நிலஅளவர் அன்பழகனிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்