சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி

குமரி மாவட்டத்தில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-23 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சீட்டு நடத்தி மோசடி

குமரி மாவட்டம் ஆற்றூர் முள்ளுவிளையை சேர்ந்தவர் பத்மகுமார் (வயது 46). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூவாற்றுமுகத்தில் ஒரு சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் மனைவி வசந்தி மற்றும் மகன் பரத்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்தநிலையில் நான் அந்த சீட்டு நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.4 லட்சம் சீட்டில் சேர்ந்தேன். இதில் 40 மாதங்கள் வரை பணம் செலுத்த வேண்டும். நான் இதுவரை ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் செலுத்தியுள்ளேன். இதைத் தொடர்ந்து 30-வது தவணை செலுத்திய பிறகு ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தேன். ஆனால் தற்போது வரை ஏலம் எடுத்த பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. மேலும் நான் செலுத்திய பணத்தையும் தராமல் மோசடி செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாய்-மகன் கைது

இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பொருளாதார குற்றப்பிரிவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சீட்டு நிறுவனத்தில் 100 பேருக்கு ரூ.2 கோடி வரை பணம் கொடுக்க வேண்டி இருந்தது தெரியவந்தது. இதில் சுமார் 10 பேர் வரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வசந்தி மற்றும் அவருடைய மகன் பரத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்