மார்கழி மாத பவுர்ணமி - திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
பவுர்ணமி நாட்களில் மலையை சுற்றியுள்ள 14 கி.மீ. கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் மார்கழி மாதத்திற்கான பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ராஜகோபுரம் முன்பாக கற்பூரம் ஏற்றி தங்களது கிரிவலத்தை தொடங்கிய பக்தர்கள், 14 கி.மீ. கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். கிரிவலத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.