17 ஆண்டுகளுக்கு பிறகு தூள்செட்டி ஏரி நிரம்பியது

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரி நிரம்பியது.

Update: 2022-09-05 16:29 GMT

பாலக்கோடு:

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரி நிரம்பியது.

வெள்ளப்பெருக்கு

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக சின்னாறு அணை நிரம்பியது. இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக சின்னாறு அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 8,100 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் சின்னாறு கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்தது.

தூள்செட்டி ஏரி நிரம்பியது

பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரி 262 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பியது. தூள்செட்டி ஏரி நிரம்பியதால் 15 கிராமத்தில் உள்ள 159.299 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்