குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Update: 2023-07-24 16:44 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ெதாழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றினர்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்களை அளித்து முறையிட்டனர். அப்போது குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு முன்பு ஒரு தம்பதி தனது 3 வயது மகனுடன் வந்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர்.

விசாரணையில், அவர்கள் ஊத்துக்குளி அருகே சர்க்கார் பெரியபாளையம் தில்லைநகரில் வசித்து வரும் வெற்றிவேலன், அவரது மனைவி மற்றும் 3 வயது மகன் என்பது தெரிய வந்தது.

இடம் ஆக்கிரமிப்பு

வெற்றிவேலன் போலீசாரிடம் கூறுகையில், ''எனது வீட்டுக்கு அருகே உள்ள இடத்தை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து மாடு, கன்றுகளை கட்டி வைத்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறார்கள். இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.

தட்டிக்கேட்டால் பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தையால் திட்டி கொலைமிரட்டல் விடுக்கிறார். நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனால் மனம் உடைந்து தீக்குளிக்க முயன்றேன்" என்று கூறினார். அவர்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்