மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லக்குண்டா பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது மகன் அரிகிருஷ்ணன் (வயது 36). இவரது உறவினரான சின்னகந்திலி பகுதியைச் சேர்ந்த சாமுடி மகன் சுரேஷ் (32) தேங்காய் லோடு ஏற்றும் தொழிலாளி.
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து சின்னகந்திலி நோக்கி அரிகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் தனித்தனி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
பங்காளமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முனிசாமி (60) என்பவர் சென்ற மோட்டார்சைக்கிளும் சுரேஷ் மோட்டார்சைக்கிளும் ேமாதிக்கொண்டன. படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முனிசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இறந்த சுரேசுக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் வனிஷ்கா (8), நித்திஷ்கா (1½) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இது சம்பந்தமாக அரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.