கடலூர் அருகே விபத்து:அமைச்சர் பொன்முடி கார் மோதி தொழிலாளி படுகாயம்

கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி கார் மோதி தொழிலாளி படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-05-08 18:45 GMT

தி.மு.க. பொதுக்கூட்டம்

தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூட்டம் முடிந்ததும் இரவு 8.30 மணி அளவில் தனது காரில் விழுப்புரம் புறப்பட்டார். கடலூர் அடுத்த காராமணிக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது அமைச்சர் பொன்முடியின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நடுவீரப்பட்டை சேர்ந்த தொழிலாளி ஜோதி(வயது 50) என்பவர் பலத்த காயமடைந்தார். உடனே அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது பாதுகாப்புக்கு வந்த போலீசார், படுகாயமடைந்த ஜோதியை மீட்டு போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் அமைச்சர் பொன்முடி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து அவர் தனது காரிலேயே விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இதுதொடா்பாக நெல்லிக்குப்பம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அமைச்சரின் கார் மோதி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்