மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளி
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தேன்மொழி (40). இந்த தம்பதிக்கு நிஷா, ஜனனி என்ற 2 மகள்களும், பாலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
தினமும் ஆனந்தன் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் கணவரை பிரிந்த தேன்மொழி தனது குழந்தைகளுடன் பெரம்பலூருக்கு குடிபெயர்ந்து விட்டார். ஆனந்தனும், சமயபுரம் அம்மன் நகரை சேர்ந்த உறவினர் முருகேசனின் மகன் விஜய் (25) என்பவரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
கொலை
கடந்த 24-6-2019 அன்று விஜய் வேலைக்கு சென்றுவிட்டார். இதனிடையே ஆனந்தன் விஜய் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். விஜய்யின் மனைவி சத்தம் போடவே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வேலை முடிந்து விஜய் வீட்டுக்கு வந்ததும் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் அன்று நள்ளிரவு திருச்சி-சென்னை பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு விறகு கடை முன் படுத்திருந்த ஆனந்தன் மீது கல்லைப்போட்டு கொலை செய்தார்.
இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பான வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், விஜய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து விஜய்யை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.