தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் விழா

தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவிலில் குட்டிக்குடித்தல் விழா நடந்தது.

Update: 2023-04-06 21:43 GMT

உக்கிரமாகாளி அம்மன் கோவில்

திருச்சி தென்னூரில் கிராம எல்லைக்காவல் தெய்வமான உக்கிரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேர் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி மறுகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 4-ந்தேதி இரவு கோவிலில் இருந்து மந்தைக்கு அம்மனை அழைத்து வரும் காளிவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் பகலில் சுத்தபூஜையும் அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

குட்டிக்குடித்தல்

விழாவின் சிகர நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல், தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தென்னூர் பிடாரி மந்தையை அடைந்தது. இதைத்தொடர்ந்து காவல் தெய்வமான சந்தன கருப்பு குட்டிக்குடித்தல் விழா தென்னூர் பிடாரி மந்தையில் திருத்தேர் முன்பு நடைபெற்றது.

அப்போது, ஆட்டுக்குட்டிகளின் குரல்வளையை மருளாளி கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்து, அருள்வாக்கு கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன.

அன்னதானம்

விழாவில் திருச்சி மட்டுமின்றி மாவட்டத்தின் பிறபகுதிகளில் இருந்தும், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் தென்னூரில் பல்வேறு இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும், அம்பாள் வீதி உலாவும், நாளை (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்