குடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத்தலைவர்கள் வலியுறுத்தினர்.
வளர்ச்சி திட்டப் பணிகள்
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகள் திருமூர்த்திகூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறது.
இப்பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு சில ஊராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர்வருகிறது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலாசவுந்தர்ராஜ், வெங்கடேசன், கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார்கள்.
தடையின்றி குடிநீர்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய 23 ஊராட்சிகளும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளும் திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முழுமையாகவும் குடிநீர் தடையின்றி அனைத்து ஊராட்சிகளுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022- 2023-ம் நிதி ஆண்டில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கோட்டையோடு நின்று விடாமல் கடைக்கோடி மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளான அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனை பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீர், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்கு தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சி திட்டங்கள் அமைகின்றன. திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து முழு கவனம் செலுத்தி உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடன் உதவிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.20 ஆயிரத்தில் தொழில் கடனுதவிக்கான காசோலையும், 8 சுய உதவி குழுக்களுக்கு ரூ 70 லட்சத்து 20 ஆயிரத்தில் கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் 4-ம் மண்டல தலைவரும்,தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுகந்திமுரளி, குடிமங்கலம் ஆணையாளர் சாதிக்பாட்ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவகுருநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.