குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
தரங்கம்பாடியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தென்னிந்திய, உரோமன் கத்தோலிக்க, தமிழ் நற்செய்தி லுத்தரன் திருச்சபைகள் சார்பில் ஐக்கிய குருத்தோலை ஞாயிறு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில் கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, லுத்தரன் திருச்சபைகளின் மதகுருக்கள் குருத்தோலை ஞாயிற்றின் தொடக்க நிகழ்ச்சிகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த 3 திருச்சபைகளின் உறுப்பினர்களும்,புனித தெரசா பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த அருட்சகோதரிகளும் வழி எங்கும் ஓசன்னா என்ற பக்தி பாடல்களை பாடியும் திருமந்திரங்களை ஜெபித்தும் சென்றனர். ஊர்வலம் தரங்கம்பாடியின் முக்கிய வீதி வழியாக சென்று கடைத்தெருவை வந்து அடைந்தது. அப்போது தரங்கம்பாடி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குகுரு அருளானந்து, குருத்தோலை ஞாயிற்றின் இறைச் செய்தியை வழங்கினார். தொடர்ந்து புதிய எருசலேம் ஆலயம், புனித சீயோன் ஆலயம், புனித ஜெபமாலை அன்னை ஆலயம்,பொறையாறில் உள்ள பெத்லேகம் ஆலயம் ஆகிய ஆலயங்களை ஊர்வலம் சென்றடைந்தது. பின்னர் அவர் அவர்களின் திருச்சபை முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.