குறவன் சாதி சான்றிதழ் கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டம்

சாதி சான்றிதழ் கேட்டு நடைபெற்று வரும் போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-01 18:13 GMT

பிச்சை எடுக்கும் போராட்டம்

திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு குறவன் இன (எஸ்.சி) சாதி சான்று வழ்கக்கோரி திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோட்டாட்சியர் லட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சாதி சான்றிதழ் கேட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

பேச்சுவார்த்தை

நேற்று காலை சமையல் பாத்திரங்களுடன் உள்ளே வந்தபோது போலீசார் அவர்களுக்கு உள்ளே சமைப்பதற்கு அனுமதி இல்லை எனக் கூறியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமையில் நகராட்சி கவுன்சிலர் மு.வெற்றி கொண்டான் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகம் வந்து கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார்கள் சிவப்பிரகாசம் குமார் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உண்மை நபர்களை கண்டறிந்த பின்னரே சாதி சான்றிதழ் வழங்க முடியும், இதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் எனவே போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் கூறினர்.

15 நாட்களில்...

அதன் பின்னர் வன்னியரசு மற்றும் கோட்டாட்சியர் லட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 15 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்கப்படும், எனவே அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில் சாதி சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ -மாணவிகள் செய்முறை தேர்வு உள்ளதால் போராட்டத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிஞ்சி தமிழ் பேரவை பொது செயலாளர் தேவகலை அழகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்