திருப்பூர் சூசையாபுரம் தண்ணீர் தொட்டி அருகே, செகண்ட்ஸ் பனியன் வியாபாரியான ஹக்கீம் என்பவரிடம் செல்போனை திருப்பிக்கேட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் (20), அவரது நண்பர்களான கண்ணன் (22), அஜித் (20) ஆகியோர் கல்லால் தாக்கிவிட்டு, விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக கூறி ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஹக்கீமை அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி ஹக்கீம் இறந்தார்.இதுகுறித்து வடக்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நவீன்குமார், கண்ணன், அஜித் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வழிப்பறி வழக்கு உள்ளது. இவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.அதன்படி கோவை சிறையில் உள்ள நவீன்குமார், கண்ணன், அஜித் ஆகிய 3 பேரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 16 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.