பூலாம்பாடியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பூலாம்பாடியில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-07-06 18:39 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் சிதிலமடைந்து பாழடைந்த நிலையில் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர். பின்னர் தொழிலதிபர் டத்தோ.எஸ்.பிரகதீஷ் குமார் உதவியுடன் திரவுபதி அம்மன் கோவில், ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோவில், தர்மராஜா சுவாமி கோவில், அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர் கோவில், பலி பீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும், அதனைத்தொடர்ந்து 2-ம் கால யாகபூஜை, 3-ம் கால யாகபூஜை, யந்திரஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதல், 4-ம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மகாபூர்ணாகுதி மற்றும் கும்பங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று தொழிலதிபர் பிரகதீஷ் குமார் தலைமையில் விமானம், ராஜகோபுரம், மூலாலயமூர்த்தி ஆகிய கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் பூலாம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சாரதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் பெரம்பலூர் பிரபாகரன், பரமத்தி ராஜேந்திரன், மலேசிய நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் பிரகதீஷ்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்