பழனி முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ‘அரோகரா’ சரண கோஷம் விண்ணதிர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு 'அரோகரா' சரண கோஷம் விண்ணதிர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டது.
கும்பாபிஷேகம்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. உலக புகழ்பெற்ற இந்த கோவிலில் தண்டாயுதபாணியாக முருகன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் சிலையானது 18 சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாஷாணங்களை கொண்டு செய்யப்பட்டதாகும்.
பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள்.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி பழனியில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதனால் பழனியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜை நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. ஆனால் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
16 ஆண்டுகளுக்கு பிறகு...
இதற்கிடையே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பழனி முருகன் கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகம் குறித்து தொடர் ஆய்வு செய்தார். இதையடுத்து பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் தேதியை எதிர்பார்த்து பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி நடந்த கோவில் அறங்காவலர் குழு, அதிகாரிகள் கூட்டத்தில் பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ந்தேதி (நேற்று) கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், ஆதீனங்கள், ஸ்தபதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்ட மூலவர் சிலை பாதுகாப்புக்குழுவும் அமைக்கப்பட்டது.
கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பழனி முருகன் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருந்ததால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. பின்னர் கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், ராஜகோபுரம் மற்றும் உபசன்னதி கோபுரங்களில் கலசஸ்தாபனம் செய்யப்பட்டது.
யாகசாலை பூஜைகள்
மேலும் கும்பாபிஷேக விழாவுக்காக கோவில் கார்த்திகை மண்டபத்தில் 90 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த 23-ந்தேதி மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் கலசத்தில் அருட்சக்தி கொணரப்பட்டது. பின்னர் அந்த சக்திகலசங்கள் யாகசாலைக்கு வந்து முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் 150 குருக்கள்கள், 108 ஓதுவார்கள் கொண்டு 24-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினமும் 2 கால யாகசாலை பூஜைகள் என 7 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பழனி கோவிலில் 8-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அப்போது விதை, வேர், தண்டு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, தயிர், நெய், பச்சை கற்பூரம், சந்தன கட்டை, அகில்கட்டை, பழரசங்கள் மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு யாகம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாகுதி, தீபாராதனைக்கு பின் கந்தபுராணம், திருமுறை, திருப்புகழ் போன்றவை தமிழில் பாடப்பட்டது.
தங்க கோபுரம், ராஜகோபுரம்
பின்னர் காலை 8.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் மங்கல இசையுடன் கோவிலின் அனைத்து கோபுரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி மற்றும் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தங்ககோபுர பகுதியில் நின்று பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு சரியாக 8.45 மணிக்கு வாத்திய இசை முழங்க, தேவாரம், திருப்புகழ் பாடி பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான குருக்கள்கள் தங்கவிமான கலசம், ராஜகோபுரம் மற்றும் சுற்றுசன்னதி கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா", "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். பக்தர்களின் சரண கோஷம் பழனியையே அதிர செய்தது.
மலர்தூவிய ஹெலிகாப்டர்
கும்பாபிஷேக நிகழ்ச்சியின்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரம் மீது மலர்கள் தூவ ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கும்பாபிஷேகத்தின்போது கோபுரம் மீது மலர் தூவுவதற்காக பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டு பழனி கோவிலை சுற்றி வந்தது. பின்னர் தங்ககோபுரம், ராஜகோபுரம் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அதேபோல் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. இவ்வாறு 2 முறை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
அதைத்தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கிடையே சிறப்பு எந்திரம் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது சிலர் பாட்டிலில் தீர்த்தத்தை ஆர்வமுடன் பிடித்தனர்.
பக்தர்களுக்கு பிரசாத பைகள்
அதைத்ெதாடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் சன்னதியில் முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கோவில் உட்பிரகார பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு பக்தர்களுக்கு இலவச பிரசாத பைகள் வழங்கப்பட்டன. இதில் திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், தீர்த்தம், முருகன் படம் ஆகியவை இருந்தது. இதையும் பக்தர்கள் போட்டிபோட்டு வாங்கினர்.
இதற்கிடையே பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் முன்பு எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்
கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் குடமுழுக்கு மண்டபம், நாதஸ்வர பள்ளி, கோசாலை பகுதி என 3 இடங்களில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் பழனி கோவில், அடிவாரம், டவுன் ஆகிய இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் நெரிசலை குறைப்பதற்காக சின்னாரக்கவுண்டன்வலசு பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு வந்த வெளியூர் பக்தர்கள் பழனிக்கு வர இலவச பஸ் வசதி செய்யப்பட்டது.
மேலும் அடிவாரம், பஸ்நிலைய பகுதியில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை அங்கிருந்த பக்தர்கள், பொதுமக்கள் பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.
திருக்கல்யாணம்
கும்பாபிஷேகத்தையொட்டி பழனி முருகன் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் முருகப்பெருமான் பிரகாரத்தில் வலம் வந்தார்.
கும்பாபிஷேக விழாவில் சென்னை, மதுரையில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதிகள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழனிக்கு படையெடுத்தனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கோவில் நிர்வாகம் சார்பில் 2 ஆயிரம் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்பு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் ஒவ்வொரு சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.கும்பாபிஷேகத்தையொட்டி பழனியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது.