கோவை
21 ஆண்டுகளுக்கு பிறகு கோவை சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஷீரடி சாய்பாபா
மனிதராய் அவதறித்து அன்பால் அனைத்து உயிர்களையும் தன்பால் ஈர்த்து கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாய்பாபா. கல்லை கரைத்து, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாய்பாபாவுக்கு தென்னிந்தியாவில் முதல்முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகாலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இந்த ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ஸ்ரீநாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது.
கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் அருள் பாலிக்கும் சாய்பாவை கண்டவுடன் நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடியும். அத்துடன் இங்கும் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதற்காக ராமலிங்கம் காலனி அய்யப்பன் கோவிலில் இருந்து நாகசாயி கோவிலுக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து, சிவாச்சாரியார் அழைப்புடன் விழா தொடங்கியது. அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, நாகசாயி அர்ச்சனை நடந்தது.
கும்பாபிஷேகம்
28-ந் தேதி காலை 8 மணிக்கு கோபூஜை, மண்டப ஆராதனை, வாஸ்து ஹோமம், மாலை 4 மணிக்கு முதற்கால யாக சாலை பூஜை நடந்தது. 29-ந் தேதி 2-ம் கால யாக சாலை பூஜை, மங்கள இசை, வேத பாராயணம், ஸ்ரீநாகசாயி தலவரலாற்று புத்தகம் வெளியிடுதல், 30-ந் தேதி 3-ம் கால யாகசாலை, விக்னேஷ்வர பூஜை, சாயிபாபா மஹா அபிஷேகம், 31-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு விக்ரங்கள் பிரதிஷ்டை, காலை 8 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, மஹா தீபாராதனை, மாலை 4 மணிக்கு 5-ம் கால யாக சாலை பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது. அப்போது மூலிகை பொருட்களை கொண்டு யாகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, மங்கள இசை, நாடி சந்தனம், தத்தவார்ச்சனை, மஹா பூர்ணாகுதி பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. யாக சாலை பூஜைகளை ஆந்திராவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, வித்யாதார் சர்மா ஆகியோர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து காலை 8.45 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9.07 மணியளவில் வேத மந்திரங்கள் ஓத அனைத்து சன்னதிகளுக்கும் சமகால மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலின் கோபுர கலசங்களில் வாத்திய இசை முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
டிரோன் மூலம் மலர் தூவினர்
கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுர கலசங்கள் மீது டிரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அதேபோல் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டன. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாய்பாபா... ஷீரடி சாய்பாபா.. நாகசாயி பாபா என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் பிரத்யேக எந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து அனைத்து மூர்த்திகளுக்கும் காலை 11.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. முன்னதாக சாய்பாபா கோவில் சன்னதி முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கும்பாபி ஷேகத்தையொட்டி அதிகாலையிலேயே சாய்பாபா கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் வரிசையில் நின்று கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்களின் வசதிக்காக காப்பீடு, மருத்துவ முகாம், மாற்றுதிறனாளிகளுக்கு வீல் சேர் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் கும்பாபிஷேக விழாவை கோவில் அமைந்துள்ள பகுதியில் ஆங்காங்கே திரையிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோவில் பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சிலம்பரசன் முன்னிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று, தங்கரத பவனி
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீநாகசாய் உற்சவமூர்த்தி திருவீதி உலா நடந்தது. பின்னர் மாலை 6.45 மணியளவில் மதுரை முத்துவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு முதல் நாள் மண்டல பூஜை, ஸ்ரீநாகசாயி அபிஷேகம் மற்றும் அலங்காரம், மாலை 7.45 மணிக்கு தங்க ரதம் பவனி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு மஹா திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன.
கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீநாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் டாக்டர் சர்வோத்தமன், அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், சுகுமார், அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன், பாபுஜி சுவாமிகள், விஷ்ணுபிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.