ஆலந்துறையார் கோவிலில் கும்பாபிஷேகம்

அரியலூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலந்துறையார் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-01 19:29 GMT

ஆலந்துறையார் கோவில்

அரியலூர் நகரில் சிவன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையார் கோவில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி கணபதி ஹோமம், ஸ்ரீலட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதையடுத்து, 28-ந் தேதி கோ பூஜையும், 30-ந் தேதி செட்டிய ஏரி விநாயகர் கோவிலில் இருந்து கஜபூஜையுடன் தொடங்கி தீர்த்த சங்கரஹனம் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு முதல் காலை யாக பூஜை தொடங்கப்பட்டது. அதன்பின்னர் விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் முதல் கால யாக பூஜை, 2-ம் காலம் மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விநாயகருக்கு முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் ஆலந்துறையார் சுவாமி மற்றும் அம்பாள் விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

மண்டல பூஜை

இதன் பின்னர் மூலவர் ஆலந்துறையர் மற்றும் அம்பாள் அருந்தவ நாயகி மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆலந்துறையார் மற்றும் அருந்தவநாயகி ஆகியோருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து இரவு 7 மணி அளவில் ஆலந்துறையார் சுவாமி மற்றும் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினர். இந்த வாகனம் பெரிய அரண்மனை தெரு, ஒப்பில்லாத அம்மன் கோவில் தெரு, பொன்னுசாமி அரண்மனை தெரு வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அறங்காவலர்களும், ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழு மற்றும் ஸ்ரீ நரசிம்மா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாமளா தேவி (பொறுப்பு) தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்