குமரி மீனவர்கள் மீண்டும் கேரளாவுக்கு பயணம்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததையடுத்து ஊர் திரும்பிய குமரி மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புறப்பட்டனர்.

Update: 2023-01-02 18:45 GMT

குளச்சல்:

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததையடுத்து ஊர் திரும்பிய குமரி மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புறப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

குமரி மாவட்டத்தில் 3 அரசு மீன்பிடித்துறைமுகங்கள், ஒரு தனியார் மீன்பிடித்துறைமுகங்களும் உள்ளன. இங்கு மீன்பிடித்தொழில் நடந்தாலும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளா, குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநில கடல் பகுதிகளில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஊர் திருவிழா, இல்லத்திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஊர் திரும்புவது வழக்கம்.

சொந்த ஊர் திரும்பினர்

அதன்படி இந்த ஆண்டும் கடந்த மாதம் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக கேரள மற்றும் வெளிமாநிலங்களில் தொழில் செய்து வந்த மீனவர்கள் ஊருக்கு திரும்பினர். இவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

பின்னர், மறுநாள் 26-ந்தேதி சுனாமி நினைவு நாளில் சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

மீன்பிடிக்க புறப்பட்டனர்

இந்தநிலையில் வெளி மாநிலங்களில் மீன் பிடித்தொழில் செய்யும் குமரி மாவட்ட மீனவர்கள் நேற்று காலை முதல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதேபோல் குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு தொழில் செய்து வந்த விசைப்படகு மீனவர்களும் காலையில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்