ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 2 பேர் மாயம்

வெளிநாட்டில் மீன்பிடிக்க சென்ற 2 குமரி மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுகளுக்கு தெற்காசிய மீனவ தோழமை கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-10-23 19:46 GMT

நாகர்கோவில்,

வெளிநாட்டில் மீன்பிடிக்க சென்ற 2 குமரி மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தர மத்திய, மாநில அரசுகளுக்கு தெற்காசிய மீனவ தோழமை கோரிக்கை விடுத்துள்ளது.

2 மீனவர்கள் மாயம்

குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சகாய செல்சோ (வயது 37). இதே பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி வின்சென்ட் (33). இவர்கள் இரண்டு பேரும் பக்ரைன் நாட்டில் அங்குள்ள முதலாளி தராக் மாஜித் என்பவரால் அவரது படகில் மீன்பிடிப்பதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்த 2 மீனவர்களும் கடந்த 17-ந் தேதி அங்கு மொராக் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு ஆழ் கடலுக்கு சென்றனர்.

3 நாட்களில் இந்த மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும். அதன்படி 19-ந் தேதியே இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் 8 நாட்களாகியும் இந்த மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதையறிந்த தெற்காசிய மீனவ தோழமை, வளைகுடா நாட்டில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு விசாரித்தது. அப்போது அவர்கள் மீன்பிடிக்கும் அந்த நாட்டுக் கடல் பகுதியில் மாயமான மீனவர்கள் உள்ளார்களா? என்று தேடிப் பார்த்தும் அவர்களை பற்றிய தகவல் இல்லை.

கோரிக்கை

இதனால் மீனவர்கள் நிலைமை என்ன? என்பது மிகவும் அச்சத்திற்குரியதாக இருக்கிறது. மாயமான மீனவர்கள் ஒரு வாரம் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது மீனவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளதோடு, அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ? என்ற ஒரு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாயமான 2 மீனவர்களையும் உடனடியாக கண்டுபிடித்து தரக்கோரி பக்ரைன் அரசை வலியுறுத்த வேண்டுமென தெற்காசிய மீனவ தோழமையின் பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், மீனவ குடும்பங்களின் சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்