கிளைகால்வாய் குறுக்கே சேதமான பாலம்

Update: 2023-09-05 17:37 GMT


புதுப்பாளையம் கிளை கால்வாய் குறுக்கே கட்டப்பட்டு சேதமான பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுப்பாளையம் கிளைக்கால்வாய்

பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.புதுப்பாளையம் கிளைகால்வாய் மூலம் 2-ம் மண்டலத்தில் 7219 ஏக்கர் 4-ம் மண்டலத்தில் 7310 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வாயில் இருந்து பூசாரிப்பட்டி ஷட்டரில் பிரிந்து 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது. ஆங்காங்கே ஷட்டர்கள் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழதுவங்கியது. மழைக்காலங்களில் களிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் மண்சரிவும் ஏற்பட்டது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.புதுப்பாளையம் கிளை கால்வாயில் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு களிமண் நிலங்கள் அமைந்துள்ள பகுதியில் கரைகள் வலுவிழந்துள்ளது கண்டறியப்பட்டது.

புதுப்பிக்கும் பணி

கரைகளை புதுப்பிக்க ரூ.4 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நிதியில் கரை சிலாப் கற்கள் முதலில் அகற்றப் பட்டது. கரையை ஒட்டியுள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் செம்மண் கொட்டி சீரமைத்தனர். பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் சிலாப்கள் பதிக்கப்பட்டன. இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

புதுப்பாளையம் கிளை கால்வாய் புதுப்பிக்கும் பணிநடந்து முடிந்துள்ள நிலையில் புதுப்பாளையம் கிளை கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டபாலங்கள் பலமிழந்தும் விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் பாலத்தைக்கடந்து சென்று வரவேண்டிஉள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி புதுப்பாளையம் கிளை கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்