ரூ.26 லட்சம் முதலீடு செய்த குடியாத்தம் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த குடியாத்தம் என்ஜினீயர் உருக்கமான கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதிக வட்டி தருவதாக...
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாகக் கொண்டு ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனம் அதிக வட்டித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலித்தது. ரூ.1 லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் வட்டியாக மாதந்தோறும் தரப்பட்டது. ஏஜெண்டுகள் கமிஷன் எடுத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு ரூ.8,000 வரை வட்டியாக கொடுத்தனர்.
இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தினர். சில மாதங்கள் கூறியபடி வட்டி தந்தனர். அதன் பின்னர் நிதி நிறுவன அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏஜெண்டுகள் மற்றும் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
ரூ.26 லட்சம் செலுத்தினார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39). என்ஜினீயரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி தனலட்சுமி, இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார். இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
போன் சுவிட்ச் ஆப்
நிதி நிறுவனம் மூடப்பட்டதால் இவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பிரசாத் வந்தார். அதே கிராமத்தில் உள்ள பிரசாத்தின் மாமியார் வீட்டுக்கு மனைவியும் குழந்தையும் சென்றுள்ளனர். பிரசாத் மட்டும் தனது வீட்டிலேயே இருந்துள்ளார்.
நேற்று காலையில் தனது மனைவிக்கு போன் செய்து வீடியோ காலில் தனது குழந்தையின் முகத்தை காட்டுமாறு கூறியிருக்கிறார். தொடர்ந்து மனைவியுடன் பேசியுள்ளார். அப்போது பின்னர் பேசுவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரை மனைவி தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
தனது கணவர் செல்போனை எடுக்காததால், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது பிரசாத் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் எழுதிவைத்தார்
தற்கொலை செய்வதற்கு முன்பு பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பணம் செலுத்தினேன். என்னிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறிய காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் ரூ.26 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன். அவர் ஐ.எப்.எஸ். நிறுவனத்தில் ஏஜெண்டாக செயல்பட்டார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் அதிக வட்டிக்கு கடன் பெற்று அவரிடம் கொடுத்தேன். கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பணம் கொடுக்க இயலவில்லை. நான் தனிப்பட்ட முறையில் ரூ.12 லட்சத்துக்கு மேல் வட்டி கொடுத்துவிட்டு அதிக கடன் சுமையில் உள்ளேன். என் சாவுக்கு காரணம் ஐ.எப்.எஸ். நிறுவனம் தான். இது குறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி உள்ளார்.
பிரசாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.