இது நம்ம வார்டு-12பாதாள சாக்கடை கால்வாய் திட்டம் தொடங்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஓசூர் மாநகராட்சி 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
12-வது வார்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் 12-வது வார்டு நகரின் மைய பகுதியான பாகலூர் ரோடு பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு குடியிருப்பு காலனி, பிருந்தாவன் நகர், தென்றல் நகர், செவன் ஹில்ஸ் அபார்ட்மென்ட்ஸ், வருணா கார்டன் ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த வார்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 5 ஆயிரத்து 800 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில்தான் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் ஓசூர் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்களை கொண்டு வந்து பிரித்து, அவற்றை நேர்த்தியாக பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 50-க்கும் மேற்பட்ட தனியார் மையங்களும் இங்கு உள்ளன.
கழிவுநீர் கால்வாய்
அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அதிகளவில் வசித்து வருவதுடன் அனைத்து தரப்பு மக்களும் இங்கு நிறைந்துள்ளனர். 12-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த பெருமாயி தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சி பொது கணக்குக்குழு உறுப்பினராகவும் உள்ளார். 12-வது வார்டில் பாதாள சாக்கடை கால்வாய் அவசர தேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் சமுதாய கூடம், புதிய நூலக கட்டிடம், ரேஷன் கடை, தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் வார்டு பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி தொல்லை தருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வார்டு பகுதியில் திருட்டு பயத்தை போக்க கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து வார்டு பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
கழிவுநீர் கால்வாய்கள்
ஓசூர் பாகலூர் அட்கோவை சேர்ந்த கோவிந்தன்-
வார்டு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிப்பதே இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். அடிக்கடி கொசுமருந்து அடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல் தெருநாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதால் முதியவர்கள், சிறுவர்கள் சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தரமான புதிய சிமெண்டு சாலைகள், கழிவுநீர் கால்வாய்களை அமைத்து தர வேண்டும்.புதிதாக, தரமான கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கையாகும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மட்டும்தான் வினியோகிக்கப்படுகிறது. பிருந்தாவன் நகர், தென்றல்நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் காவிரி நீர் சீராக வினியோகிக்கப்பட வேண்டும். நூலகம், ரேஷன் கடை போன்றவையும் 12-வது, வார்டில் தேவையாக இருந்து வருகிறது. நூலகத்தை விசாலமான கட்டிடத்தில் அதிகளவிலான புத்தகங்களுடன் மற்றும் கழிப்பறை வசதியுடன் அமைத்து தரவேண்டும்.
ரேஷன் கடை
ஓசூர் தமிழ்நாடு ஹவுசிங் காலனியை சேர்ந்த இல்லத்தரசி ஆனந்தி-
கழிவுநீர் கால்வாய்கள் எங்கள் வார்டு பகுதியில் அவசர தேவையாக உள்ளது. இதனை நிறைவேற்றித்தர வேண்டும். வார்டு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குப்பை வண்டிகளை அதிகரித்து தரவேண்டும். பிருந்தாவன் நகரில், ஒரு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
12-வது வார்டை பொறுத்தவரை, கழிவுநீர் கால்வாய்கள் தான் மிக முக்கிய மற்றும் அவசர, அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
=========
என்ன சொல்கிறார் கவுன்சிலர்?
"நான் மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல், நாள்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். மேலும், வார்டு தேவைகள் குறித்து, மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ச்சியாக பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறேன்.எங்கள் வார்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள்தான் இன்றும் இருந்து வருகிறது.
ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்தப்படவுள்ள ஒரே வார்டு எங்கள் வார்டு தான். வருகிற ஜூலை மாதத்தில் இந்த பணிகள் தொடங்கப்படுவதாக தெரிகிறது. அதற்கு முன்னதாக பராமரிப்பு மற்றும் பேட்ச் வேலையை முடித்து தர வேண்டும்.
மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. போதிய ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகலூர் அட்கோ நுழைவுவாயிலில் இருந்து உள்ளே குடியிருப்புகளுக்கு செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், பஸ்களுக்கு பெயிண்டு அடிப்பது மற்றும் பராமரிப்பு பணிகளையும் அங்கேயே மேற்கொண்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து புகாரும் தெரிவித்துள்ளோம். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். எங்கள் வார்டில், ஒரு சமுதாயக்கூடம் அமைத்து தந்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை எனது வார்டுக்கு, ரூ.75 லட்சம் அளவிலான நிதி ஒதுக்கி வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அதிக நிதி மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஒதுக்கித்தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வார்டு மக்களுக்கு வேண்டியவை
கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்த வேண்டும்.
தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்