கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பி.எஸ்.ஏ.ராஜகுரு, கே. சண்முகராஜ், பி.எஸ். திருப்பதி ராஜா, தி. நிருத்திய லட்சுமி, செ. ரவீந்திரன் ஆகிய 5 பேரை நியமித்து இந்து சமய அறநிலைத்துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று அறங்காவலர் குழு தலைவர் தேர்வு மற்றும் பதவி ஏற்பு விழா கோவில் அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையாளர் தி.சங்கர் தலைமையில் நடந்த தேர்தலில் குழு தலைவராக பி.எஸ்.ஏ.ராஜகுரு தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி, ஆய்வாளர் த.சிவகலைப்பிரியா, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் குழு தலைவர் கூறுகையில்,
வரும் ஆண்டில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராஜகோபுரம் மற்றும் சாலை கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் வர்ணம் பூசப்பட்டு, கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இந்து அறநிலைய துறை சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் திருமண மண்டபம் கட்டும்பணி, புதிய மதிப்பீட்டில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
முன்னதாக, அறங்காவலர்குழு உறுப்பினர்கள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து ஆசிபெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.