உடுமலை அருகே தும்பலபட்டி கோவில் விழாவில் ஏற்பட்ட கத்திக்குத்து மற்றும் தகராறில் இரு தரப்பினர் மீதும் அமராவதி போலீஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்திக்குத்து
உடுமலையை அடுத்த தும்பலபட்டியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29).இவர் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.தும்பலபட்டியில் உள்ள சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்காக அமைக்கப்பட்ட அன்னதான கூடத்திற்கு வந்த தும்பலப்பட்டியைச் சேர்ந்த பிரவீன், நந்தா ஆகிய இருவரும் சாப்பாட்டை தூக்கி வீசியதாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்மியாட்டம் நடைபெற்றபோது அங்கு வந்த ஜெயபிரகாஷ், விஷ்ணு, பிரேம்குமார், பிரவீன், நந்தா, கார்த்தி உள்ளிட்ட சிலர் ராதாகிருஷ்ணனிடம் தகராறு செய்து உள்ளனர்.மேலும் அவரை ஜெயபிரகாஷ் கத்தியால் குத்தி உள்ளார். அதைத் தடுக்கச் சென்ற கவி பிரகாஷ், கவின்குமாரை நந்தா, பிரவீன், விஷ்ணு, பிரேம்குமார் ஆகியோர் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது அதைத்தொடர்ந்து காயமடைந்த ராதாகிருஷ்ணன், கவின்குமார், கவிபிரகாஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இருதரப்பினர் புகார்
மற்றொரு தரப்பினர் அளித்த புகாரில்"உடுமலை அடுத்த தும்பலப் பட்டியைச்சேர்ந்தவர் விஷ்ணு (27).கூலிவேலை செய்து வருகிறார். விஷ்ணுவும் நந்தா என்பவரும் கோவில் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் இடத்திற்கு சென்று சாப்பிட முயன்றதாகவும் அப்போது அங்கிருந்த சந்தோஷ்குமார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்மியாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நந்தாவின் மாமா ஜெயபிரகாஷ் இது குறித்து சந்தோஷ் குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினரிடமும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கலைந்து சென்று விட்டனர்.
அதைத் தொடர்ந்து விஷ்ணு வீட்டுக்கு சென்ற தும்பலப் பட்டியைச் சேர்ந்த சம்பத்குமார், சந்தோஷ்குமார், மகேஷ், சின்னகுட்டி, ராதா, தம்புராஜ், சிவசாமி, சுந்தரராஜ் ஆகியோர் விஷ்ணுவை தாக்கி இரும்பு கம்பியால் அடித்துள்ளனர். இதை தடுக்க முயன்ற விஷ்ணுவின் தந்தையையும் தாக்கியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து விஷ்ணு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.