திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் தேரோட்டம்

Update: 2022-06-12 15:58 GMT

அனுப்பர்பாளையம்:

வைகாசி விசாக விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஈஸ்வரன் கோவில்

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தேரோட்டம்

நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் காட்சியளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பெருமாள் கோவில் அருகே தேர்நிலையில் இருந்து புறப்பட்ட தேர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்