சேவூர் அங்காளம்மன் கோவில் 6-ந்தேதி பாலாலயம்
சேவூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 6-ந்தேதி பாலாலயம் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;
அங்காளம்மன் கோவில்
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் திருப்புக்கொளியூர் என புகழ்பெற்ற, சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல் பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசியப்பர் கோவிலில் இருந்து வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல்பெற்றதும். நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்டஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அருகே சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோவில்.
சேவூர் அங்காளம்மன் கோவில் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
ஆன்மிக திருத்தலமான நமது சேவூரில், தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு. அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலாலய நிகழ்ச்சி
இந்நிலையில் அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷகம் செய்வதற்காக, ஜூலை 6-ந்தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் சுமார் 200 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.