கறம்பக்குடி பகுதியில் நலிவடைந்த நிலையில் கோரை பாய் நெசவு தொழில்

கறம்பக்குடி பகுதியில் நலிவடைந்த நிலையில் உள்ள கோரை பாய் நெசவு தொழிலுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-30 19:39 GMT

கோரை பாய்

பாரம்பரியமான சில நிகழ்வுகளிலும் சீர்வரிசையிலும் கண்டிப்பாக கோரை பாய்க்கு இடம் உண்டு. தரையில் கோரை பாய் விரித்து படுப்பதே சிறந்த யோகாசனமாக குறிப்பிடப்படுகிறது. உடல்சூடு, முதுகு தசை பிடிப்பு பிரச்சினைகளுக்கு கோரை பாயில் உறங்குவதால் தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. கலாசாரம், பாரம்பரியம் மற்றும் மருத்துவ நலன் என பல சிறப்புகளை உள்ளடக்கிய கோரை பாய் நெசவு தொழில் கறம்பக்குடி அருகே உள்ள தீத்தான்விடுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கோரைபாய் நெய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வளரும் கோரை புற்களை கொண்டு பாய் நெசவு செய்யப்படுகிறது.

கூட்டுறவு குடிசை தொழிற்சங்கம்

இந்த தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் அங்கீகாரத்துடன் கடந்த 1958-ம் ஆண்டு தீத்தான்விடுதி பாய் நெய்வோர் கூட்டுறவு குடிசை தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இந்த சங்கத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மாணவர் விடுதிகள், அரசு மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் அரசினர் இல்லங்களுக்கு கோரைபாய் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பாய் நெசவு தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். மேலும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்பட்டு தொழிற்கூடமும் அமைக்கப்பட்டன. இதில் தொழிலாளர்கள் பாய் நெசவு பணியை மேற்கொண்டு வந்தனர்.

பொதுமக்களிடையே வரவேற்பு

இந்தநிலையில் நவீன எந்திரங்களின் வருகையால் கை தொழிலாக நடைபெற்று வந்த கோரை பாய் பின்னும் தொழில் நலிவடைய தொடங்கியது. மேலும் அரசு சார்ந்த நிறுவனங்களில் கோரை பாய்களின் பயன்பாட்டை குறைத்து மெத்தைகள், தரைவிரிப்புகள், போர்வைகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் அரசு கொள்முதல் நிறுத்தப்பட்டு கூட்டுறவு சங்கமும் செயல் இழந்தது. தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் பலர் இத்தொழிலை கைவிட்டு மாற்று வேலை தேடி சென்றுவிட்டனர்.

இருப்பினும் கையால் நெய்யப்படும் தீத்தான்விடுதி கோரை பாய்களுக்கு இன்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாலும், திருமண சீர்வரிசைகளில் கோரைபாய்க்கு மவுசு இருப்பதாலும் பாரம்பரியம் மாறாத ஒரு சில தொழிலாளர்கள் கோரை பாய் நெசவு தொழிலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கஜா புயலால் சேதம்

இதற்கிடையே கஜா புயலில் தொழிற்கூடம் சிதைந்து சின்னாபின்னமானதால் இடவசதி இல்லாமல் வீட்டில் வைத்தே தற்போது பாய் நெசவு நடைபெற்று வருகிறது. இதனால் போதிய இடவசதி இன்றி தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த தொழிற்கூடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவும், கூட்டுறவு சங்கத்திற்கு புத்துயிர் அளிக்கவும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கோவிந்தன்:- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்றனர் நம் முன்னோர்கள். ஆனால் கைத்தொழில்கள் எல்லாம் தற்போது கை கொடுக்காத தொழில்களாக மாறிவிட்டன. பாரம்பரியம் சார்ந்த கோரை பாய் நெசவுத்தொழிலை காக்க தமிழக அரசு உதவி செய்வது அவசியம் என்றார்.

சின்னத்துரை:- வெளிநாட்டு முதலீடுகளை ஊக்கப்படுத்தி தொழில் வளர்ச்சி கண்டு வரும் தமிழக அரசு உள்ளூர் குடிசை தொழில்கள் குறித்தும் ஆய்வு நடத்தி எங்கள் கோரை பாய் நெசவுக்கு முக்கியத்துவம் அளித்து உதவி செய்ய வேண்டும். அரசு சார்ந்த நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டிற்கு கோரை பாய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தீத்தான்விடுதி பாய்களுக்கு மவுசு

கோரை பாய் நெசவு செய்யும் சாமிநாதன் கூறுகையில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை தொழிலுக்கென்று உருவாக்கப்பட்ட முதன்மையான கூட்டுறவு சங்கம் தீத்தான்விடுதி பாய் நெய்வோர் குடிசை தொழிற்சங்கம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இச்சங்கத்தின் மூலம் கோரை பாய் வினியோகம் செய்யப்பட்டன.

தீத்தான்விடுதியில் கலை அம்சங்களுடன் உருவாக்கப்படும் பாய்களுக்கு முன்பெல்லாம் தமிழக அளவில் நல்ல வரவேற்பு உண்டு. இயற்கையாக வண்ணங்கள் சேர்க்கப்பட்டு திருவாரூர் தேர், தஞ்சை பெரியகோவில் மற்றும் பல்வேறு உருவங்களுடன் இங்கு தயாரிக்கப்படும் பாய்களை வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றுள்ளனர். தமிழக அரசின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் தீத்தான்விடுதி பாய்களுக்கு மவுசு அதிகம் என்றார்.

கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்

கோரை பாய் நெசவு செய்யும் முருகதாஸ் கூறுகையில், ஒரு காலத்தில் தீத்தான் விடுதி என்றாலே கோரை பாய் என்று சொல்லும் அளவிற்கு தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாக இருந்தது. அரசு நிறுவனங்கள் கொள்முதலை கைவிட்ட நிலையில், வங்கிக்கடன் உள்ளிட்ட எந்த அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்காததால் பலர் இந்த தொழிலை கைவிட்டுள்ளனர். எனவே கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்தி தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்