கொங்கராயக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

கொங்கராயக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-07-18 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி மூர்த்தி நகரை சேர்ந்த நைனார் மகன் சுந்தர்ராஜ் (வயது 36). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கொங்கராய்க்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் அவர் குளிக்க சென்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் இரவு 8 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆற்றில் தேடியுள்ளார். அப்போது அவர் குளிப்பதற்காக கொண்டு சென்ற சோப்பு, துண்டு ஆகியவை ஆற்றுப்படிக்கட்டில் இருந்துள்ளது. ஆனால் அவரை காணவில்லை.

தண்ணீரில் மூழ்கி சாவு

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஸ்ரீவைகுண்டம் போலீசாரிடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் அந்த பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடிப்பார்த்தனர். ஆனால் ஆற்றில் அவரது உடல் சிக்கவில்லை. நேற்று காலையில் பொன்னன்குறிச்சி அருகே உள்ள ஆற்று தண்ணீரில் அவரது உடல் கிடந்துள்ளது. அவர் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

ஸ்ரீவைகுண்டம் போலீசார் அந்த பகுதிகிக்கு சென்று அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுந்தர்ராஜூவுக்கு சத்யா என்ற மனைவியும், நவீன் (6) என்ற மகனும், கீர்த்திகா (3) என்ற மகளும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்