அருவிகளில் குளிக்க தடை எதிரொலி:கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததுசிதிலமடைந்த படகு இல்லத்தை சீரமைக்க கோரிக்கை

Update:2023-08-03 00:30 IST

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கின்போது கொல்லிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த ஜூலை 31-ந் தேதி தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து கொல்லிமலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவிகளில் நீராடி அரப்பளீஸ்வரரை வழிபாடு செய்வது வழக்கம்.

ஆடிப்பெருக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தியே கொல்லிமலையில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழாவும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வல்வில் ஓரி விழா நேரத்தில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் இடையே நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்ப்பதற்காக, இந்த ஆண்டு அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது.

ஏற்கனவே கரடி நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று குறைவாகவே இருந்தது. இதனால் கொல்லிமலை களைஇழந்து காணப்பட்டது. இதற்கிடையே நேற்று கொல்லிமலைக்கு வந்த குறைவான சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாவிட்டாலும், படகு சவாரி செய்து மகிழலாம் என படகு இல்லத்திற்கு வந்தனர். ஆனால் படகு இல்லம் சிதிலமடைந்து படகுகள் இயக்கப்படாமல் இருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக படகு இல்லத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்