கொடைக்கானலில் இருந்து ஏற்றுமதியாகும் கொய்மலர்கள்
காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் இருந்து கொய்மலர்களை விவசாயிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
கொய்மலர் சாகுபடி
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்பற மலைக்கிராமங்களில் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பிரகாசபுரம், குண்டுப்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர்ரக கொய்மலர் வகைகளான காரனேசன், ஜிப்சோப்ரா, சார்ட்டிஸ் மற்றும் பல்வேறு வண்ண ரோஜாக்கள் உள்ளிட்ட பூக்
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜா மற்றும் கொய்மலர்களை காதலிகளுக்கு பரிசாக கொடுத்து மகிழ்விப்பார்கள்.
வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி
இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா, ெகாய்மலர்களை கொடைக்கானலில் இருந்து சென்னை,மும்பை, பெங்களூரு மற்றும் புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த உயர்ரக கொய்மலர்கள் பூங்கொத்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உயர்ரக கொய்மலர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பூ ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு, ஒரு பூ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கொய்மலர்களை சரிவர சாகுபடி செய்ய முடியவில்லை. மேலும் விற்பனை செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதித்தது. ஆனால் இந்த ஆண்டு போதிய விலை கிடைப்பதால் கொய்மலர்களை ஆர்வத்துடன் பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகிறோம் என்றனர்.