கோடநாடு வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை

கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-01 02:22 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை, கொலை சம்பவம் நடந்தது. இதுகுறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கான அலுவலகம் கோவையில் செயல்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 செல்போன்கள், 8 சிம்கார்டுகளில் உள்ள தகவல்களை போலீசார் சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த மாதம் 11-ந் தேதி நேரில் ஆஜராகும்படி சயானுக்கு அவர்கள் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அன்றைய தினம் சயான் கேரளாவில் வேறொரு வழக்கில் ஆஜராக சென்றதால், சி.பி.சி.ஐ.டி. போலீசில் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சயானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பினர். அதில் இன்று (1-ந் தேதி) கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்தனர். அதன்படி, நீதிமன்ற ஜாமீனில் உள்ள சயான் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்