கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொலை, கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஓம்பகதூர், 11 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் முக்கிய ஆசாமியான சேலம் ஆத்தூரை சேர்ந்த டிரைவர் கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி விபத்தில் உயிரிழந்தார்.
இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராகவும் இருந்தார். மற்றொரு ஆசாமியான சயான் தனது காரில் குடும்பத்தினருடன் சென்றபோது கேரள மாநிலம் கண்ணாடி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது மனைவி, மகள் இறந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பல சந்தேகங்களை எழுப்பியது.
இந்தநிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் சிறப்பு பிரிவினர் கோடநாடு வழக்கை தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு குறித்த விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய்,வாளையார் மனோஜ், ஜம்சிர் அலி ஆஜராகினர். அதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது என சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் செல்போன் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விசாரணை ஆகியவற்றின் தற்போதை நிலைமை குறித்தும், சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.