திருப்பூர்
திருப்பூரில் ரூ.9¼ கோடிக்கு ஆடைகளை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் தலைமறைவான வடமாநில வியாபாரிகள் குறித்து உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநில வியாபாரி
திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் மனு கொடுத்தனர். சைமா சங்கத்தை சேர்ந்தவர்கள், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பனியன் வியாபாரியான ராமச்சந்திரா, ராஜேஷ், ரத்தன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களிடம் ஆண், பெண், குழந்தைகளுக்கான பனியன் ஆடைகள், உள்ளாடைகளுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்து வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் சென்னை தி.நகரில் நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார்கள்.
ரூ.9¼ கோடி மோசடி
முதலில் ஆர்டர் கொடுத்து அதற்கு உரிய பணத்தை சரியாக கொடுத்து வியாபாரம் செய்தார்கள். இதனால் அவர்களிடம் திருப்பூரில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வியாபார தொடர்பு வைத்து ஆர்டருக்கான சரக்குகளை அனுப்பி வந்தோம்.
கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களிடம் இருந்து ஆடைகளை வாங்கி வந்தனர். ஆர்டர் கொடுத்து அதற்கு உரிய தொகையை பின்தேதியிட்ட காசோலைகளாக எங்களுக்கு கொடுத்தனர். அந்த காசோலைகளை வங்கியில் மாற்றியபோது அவை பணம் இல்லாமல் திரும்பியது.
இதுகுறித்து கேட்க சென்னைக்கு சென்றபோது, அவர்கள் 3 பேரும் அங்கு இல்லை. அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து,
திருப்பூரை சேர்ந்த 49 உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களிடம் கடந்த 5 மாதங்களில் மொத்தம் ரூ.9 கோடியே 30 லட்சத்துக்கு ஆடைகளை வாங்கியுள்ளனர். நாங்கள் விசாரித்தபோது,
எங்களிடம் ஆடைகளை வாங்கி அவற்றை குறைந்த விலைக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரையும் பிடித்து பணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.