வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டப்பட்டது

வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டப்பட்டது

Update: 2022-10-10 18:45 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் கிளியனூர் பாலம் கட்டப்பட்டது.

சிமெண்டு பாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதி மங்கலத்தில் கிளியனூர் கிராமத்திற்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணாற்றின் குறுக்கே குறுகலான சிமெண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கிளியனூர் பெருமாள் கோவில் தெரு, தாமரைகுளம் தெரு, மேலத்தெரு, டிங்கி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு மற்றும் அன்னுகுடி, வேற்குடி, புனவாசல், வடபாதி மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 60- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்த பாலத்தில் டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.

கிராமங்களில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் இந்த பாலத்தை கடந்து தான் அருகாமையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வந்தனர். நாளடைவில் அந்த பாலம் பழுதடைந்தது. முகப்பில் உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் தடுப்பு கம்பிகளை தாங்கி நின்ற சுவர்கள் இடிந்து விழுந்தன.

பாலம் கட்டித்தர கோரிக்கை

மேலும் பாலத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது. தடுப்பு கம்பிகள் பழுதடைந்து உடைந்து போனதால் மூங்கில் மரங்களை கொண்டு தடுப்புகள் கட்டப்பட்டது. இதனால் பாலத்தின் தன்மை அபாயகரமான நிலையில் இருந்தது. இதனால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து சென்று வருவதற்கு அச்சம் அடைந்தனர். ஆனாலும் ஆபத்தான அந்த பாலத்தையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பாலம் நாளடைவில் பழுதடைந்து நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே பழுதடைந்த அந்த குறுகலான பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நன்றி

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தந்தனர். நடவடிக்கை எடுத்து அகலமான பாலம் கட்டித்தந்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்