மூதாட்டியை கொன்று கிணற்றில் வீச்சு

மூதாட்டியை கொன்று கிணற்றில் பிணம் வீசப்பட்டது.;

Update:2023-09-04 01:05 IST

மணப்பாறை:

மூதாட்டி மாயம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை எடத்தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் கமலவேணி(வயது 65). இவரது மகள் மலர்விழி. இவர் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கமலவேணி, அதே பகுதியில் வசித்து வரும் சரஸ்வதி(52) என்பவருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டித் தொகை பெறுவதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி காலை சரஸ்வதி வீட்டிற்கு கமலவேணி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதையறிந்த மலர்விழி மணப்பாறைக்கு வந்து குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களில் ேதடியும் கமலவேணி கிடைக்கவில்லை. இது குறித்து அவர் 17-ந் தேதி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கமலவேணி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அடித்துக்கொலை

மேலும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்ததாவது:- சரஸ்வதிக்கு வர்ஷினி என்ற மகளும், ஹர்சன்(19) என்ற மகனும் உள்ளனர். இதில் வர்ஷினி சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் கணக்காளராக பணியாற்றி வந்தார். ஆக்கி விளையாட்டு வீரரான ஹர்சன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதி வீட்டிற்கு கமலவேணி வட்டிப்பணம் கேட்டு வந்துள்ளார்.

அப்போது வாங்கிய பணத்தைவிட அதிகமாக வட்டி கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக கமலவேணிக்கும், சரஸ்வதி, வர்ஷினி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கமலவேணியை, அவர்கள் பிடித்து இழுத்து வீட்டிற்குள் தள்ளியுள்ளனர். இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் கமலவேணி உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் அவரை, அவர்கள் காப்பாற்றாமல் இழுத்துச்சென்று சமையலறையில் போட்டுள்ளனர். சிறிது நேரத்தில் கமலவேணி பரிதாபமாக இறந்தார்.

கிணற்றில் பிணம் வீச்சு

இதையடுத்து கோவில்பட்டியில் இருந்த தனது மகன் ஹர்சனை, சரஸ்வதி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர்கள் வாகைக்குளம் சாலையில் காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றை பார்த்து விட்டு வந்து, அதில் கமலவேணி யின் உடலை போட்டுவிட முடிவு செய்தனர். அதன்படி அன்று நள்ளிரவு வர்ஷினி, ஹர்சன் ஆகியோர் கமலவேணியின் உடலை மொபட்டின் முன்பகுதியில் வைத்துக் கொண்டு சென்று, கிணற்றில் உடலை வீசிவிட்டு, அதன்மீது குப்பையை போட்டுவிட்டு சென்று விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ேமலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி, வர்ஷினி, ஹர்ஷன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோபி, சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சரஸ்வதியை அழைத்து சென்று, அவர் காட்டிய கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் கமலவேணியின் உடலை மீட்டனர்.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து மணப்பாறை அரசு டாக்டர் ராஜராஜன், பிணவறை பணியாளர் ஆறுமுகம் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டு, கமலவேணியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக பிரேத பரிசோதனையையொட்டி, பிரதான சாலையில் உள்ள அப்பகுதியை சுற்றிலும் முற்றிலுமாக மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்