திருப்பூர்:
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கீழ்பவானி கால்வாய்
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் நல்லசாமி பேசியதாவது:-
கீழ்பவானி கால்வாய் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட கால்வாயாக உள்ளது. மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் பாசனம் பெறுகிறது. கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் சுற்றுச்சூழல் கெடுவதுடன் திட்டத்தின் நோக்கமும் பாழ்படும்.
தென்னை மரத்தில் இருந்து பதனீர் இறக்குவதற்கான உரிமத்தை யாரிடம் பெறுவது என்பதை தெரிவிக்க வேண்டும். கொடிவேரி பாசனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி நீர் திறந்தது கோர்ட்டு அவமதிப்பாகும். இதற்கு மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்க்கரை ஆலை
விவசாயி மனோகரன்:- சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தேங்காய் கொப்பரை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி) :- அமராவதி அணையில் 60 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. பழைய அமராவதி பாசன கால்வாய் மண் கால்வாய் ஆகும். எனவே ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கால்வாயை தூர்வார வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தொடங்கினாலும் இதுவரை 25 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. அரவை பணி கடந்த 3 நாட்களாகவே முழு வீச்சில் நடக்கிறது. கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் பணம் கிடைக்காமல் உள்ளது.
விதை நெல் உற்பத்தியாளர்கள்
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்) :- தாராபுரம் பகுதியில் 50 விதை நெல் உற்பத்தியாளர்கள் உள்ளனர். விவசாயிகளிடம் நெல்லை வாங்கி அதை சரியாக நேர்த்தி செய்யாமல் விற்பனை செய்கிறார்கள். இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அவினாசிபாளையம்-ஒட்டன்சத்திரம் சாலை விரிவாக்க பணியின் போது குண்டடம் காஞ்சிவரம் பகுதியில் பி.ஏ.பி. பிரதான கால்வாய் புனரமைக்கப்படாமல் விட்டுவிட்டனர். இதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.