கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பிரச்சினை: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயிகள் புகார் மனு

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பிரச்சினை குறித்து மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனா்.

Update: 2023-06-23 21:11 GMT

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பிரச்சினையில், கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.

விவசாயிகள் மனு

சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கி.வே.பொன்னையன். இவர் கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

இவர் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அவருடன் விவசாயிகள் அமைப்பினை சேர்ந்த ராமசாமி, பெரியசாமி, சுப்பு மற்றும் பலர் வந்தனர்.

கீழ்பவானி சீரமைப்பு

அந்த புகார் மனுவில் கி.வே.பொன்னையன் கூறி இருந்ததாவது:-

கீழ்பவானி பாசனப்பகுதியில் எனக்கு 10 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். தற்போது கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க செயலாளராகவும் செயல்பட்டு வருகிறேன். கீழ்பவானி வாய்க்காலில் ரூ.710 கோடி செலவில் சீரமைப்பு வேலைகள் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பணியை கீழ்பவானி ஆயக்கட்டில் இல்லாத சிலர் முடக்குவதற்கு சதி திட்டம் போட்டனர்.

கீழ்பவானி சீரமைப்பு திட்டம் குறித்து அரசு வெளியிட்டு உள்ள திட்ட அறிக்கையில் கால்வாய் முழுவதும் கான்கிரீட் போடப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. கால்வாயை பலப்படுத்தும் வேலைகள் மட்டும்தான் செய்யப்படும் என்று நீர்வளத்துறை தொடர்ந்து விளக்கம் அளித்து உள்ளது. தமிழகநீர் வளத்துறை அமைச்சரும் தவறான பிரசாரங்கள் அனைத்துக்கும் விளக்கம் அளித்து விட்டார்.

மிரட்டல்

ஆனால் சீரமைப்பு வேலைகள் செய்தால் கீழ்பவானி பகுதியில் குடிநீர் பஞ்சம் வரும், பாசனப்பகுதி முழுவதும் பாலைவனம் ஆகிவிடும் என்று பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கீழ்பவானி சீரமைப்பு பணிக்கு எதிராக உள்ள நபர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் என்னை, தொலைத்துக்கட்டி விடுவேன், இல்லாமல் செய்து விடுவேன்.

ஊரை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதில் ஒரு நபரின் குரல் பதிவினை பதிவிறக்கம் செய்து புகாருடன் இணைத்து இருக்கிறேன். ஐகோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த இயங்கி வரும் என்னை தாக்கி அழிப்போம் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்து இருக்கும் நபரை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்